பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலை மூடப்பட வேண்டிய தேவை இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்
ஹைலைட்ஸ்
- நேற்று அதிகாலை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது
- இதற்கு தமிழக அளவில் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன
- இது குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது
புதுக்கோட்டையில் இருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நீண்ட ஆண்டுகளாக பெரியார் சிலை உள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், இந்த சிலை தேர்தல் விதிமுறைப்படி துணியால் மூடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலை மூடப்பட வேண்டிய தேவை இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி துணியால் மூடப்பட்டிருந்த பெரியார் சிலையை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகள் அகற்றினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெரியார் சிலையின் தலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எச்.ராஜா, ‘பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது. குற்றவாளிகள் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' என்று கூறியுள்ளார்.