முன்னதாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எங்களது கட்சி விவகாரங்களில் பாஜகவினர் தலையிடுவது தவறு, அதேபோல், அவர்களது கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். உறவு என்பது வேறு, மத்திய அரசும், மாநில அரசும் நல்ல உறவுமுறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இங்கு தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்கள் அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். திராவிட கட்சிகள் தமிழத்தில் இனி இருக்காது என்கிறார்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?
இது ஊழல் கட்சி என்கிறார்கள், அமித்ஷா வருகையின் போது கூட, தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்றார். அப்படி என்றால் அதை ஏற்றுக்கொண்டு மெளனமாக இருக்க முடியுமா? பொன்.ராதாகிருஷ்ணன் பலமுறை பேசும்போது எங்களை பார்த்து இது செயல்படாத அரசு என்கிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதற்கும் மெளனமாக இருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, சிகலாவை முதல்வராக்க முயன்ற தம்பிதுரையை, அமமுகவில் சேர்த்துக்கொள்வதாக தங்கதமிழ்ச்செல்வன் கூறுவதில் இருந்து பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது தெரிகிறது.
தம்பிதுரையின் நோக்கம் பாஜக மீது அல்ல. முதல்வரை சங்கடப்படுத்த வேண்டும் என்பதே தம்பிதுரையின் நோக்கம். ஏனெனில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக விடாமல், சசிகலாவை முதல்வராக்க தம்பிதுரை முயற்சி செய்தார். அதில், அவருக்கு என்ன பேரம், எத்தனை கோடிகள் பேச்சப்பட்டது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஏனென்றால் சசிகலா என்று சொன்னாலே அப்படிப்பட்டவர். சிறைக்குள் சிறப்பு சலுகைகள் பெறுபவர் அவர்.
தற்போது தங்கதமிழ்ச்செல்வன் என்ன கூறுகிறார், கனிசமான எம்எல்ஏக்களுடன் தம்பிதுரை வந்தால் நாங்கள் எங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்கிறோம் என்று கூறுகிறார். இதிலிருந்து தெரியவில்லையா, பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது. தினகரனுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு முதல்வரை சங்கடப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் தம்பிதுரை பேசும் விஷயத்திற்கு நான் எப்படி பதில் கூற முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.