ஹைலைட்ஸ்
- திரௌபதி படம் நேற்று ரிலீஸ் ஆனது
- முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் திரௌபதிக்கு ஆதரவாக பேசியிருந்தார்
- திரௌபதி பல முறை தள்ளிபோன பிறகு நேற்று ரிலீஸ் ஆனது
சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘திரௌபதி' நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ‘பழைய வண்ணாரப்பேட்டை' பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி'. மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ‘காதல் வைரஸ்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ரிஷியுடன் இப்படத்தில் ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் கேமரா கையாள, தேவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வேல் முருகன் பாடிய ‘கண்ணாமூச்சி ஆட்டம்' பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் மோகன்.ஜி-யுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார், பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, “இந்தப் படம் வந்ததிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தும் பொய் என்பது இந்தப் படத்தைப் பார்த்த பின்னர் தெரிந்து கொள்ளலாம். வெகு நாளுக்குப் பின்னர் குடும்பத்தோடு, குறிப்பாகப் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டிய படம் திரௌபதி. இந்த தலைப்பை வைத்த காரணத்திற்காகவே படக்குழுவைப் பாராட்டியாக வேண்டும். அனைத்துப் பெண்களும் திரௌபதியைப் போல வாழ வேண்டும் என்பதுதான் என் விருப்பம்,” என்றார்.
தொடர்ந்து ஒரு நிருபர், ‘காதல் - நாடகக் காதல், இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?' என்றார். அதற்கு ராஜா, “இருவர் நன்கு உலகைப் புரிந்து கொண்டு முதிர்ச்சி பெற்று ஒன்றிணைந்தால் அது காதல். காமத்திற்காக இணைந்தால் அது வெறும் நாடகக் காதல். இன்ஃபேக்சுவேஷன். அவ்வளவுதான்,” என்று நடையைக் கட்டினார்.