முன்னதாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்ட போது, முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பிய நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். எனினும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், தான் கூறியது சரித்திர உண்மை என தொடர்ந்து கமலும் உறுதியாக கூறி வருகிறார்.
இந்நிலையில் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும்போது, கமல்ஹாசனின் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், கமலின் சகோதரர் சந்திரஹாசன் உயிரிழந்த போது, அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, கமல்ஹாசன் ஒரு இந்துவாக தன்னை நாத்திகன் என்று சித்தரித்துக்கொண்டாலும், அவர் ஒரு கிறிஸ்துவர். அவரது அண்ணன் சந்திரஹாசன் லண்டனில் இறந்தபோது, சர்ச்சில் நல்லடக்கம் செய்யப்படுகிறார். சர்ச்சில் கமல்ஹாசனும் பேசுகிறார்.
இவரது குடும்பம் முழுவதுமே கிறிஸ்துவ குடும்பம், நான் கிறிஸ்துவ மதத்தை பரப்பி வருகிறேன் என கமலே ஒரு முறை கூறியிருந்தார். இதனை ஒவ்வொரு இந்து உணர்வாளர்களும் புரிந்துக்கொண்டு அவரை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.