H.Raja slams Vaiko - "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா புரட்சி நடந்தது. அதில் பலர் வந்து பேசினார்கள். பலர் கலந்து கொண்டனர். ஆனால், கடைசியில் போலீஸிடம் சிக்கியது யார்."
H.Raja slams Vaiko - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக (Tamilnadu BJP) சார்பில், நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் குடியுரிமைச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் (Ponnar), பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா (H.Raja), பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் குறித்துப் பேசிய ராஜா, “மாணவர்களுக்கு நான் ஒன்றைத்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் கட்சிகளை நம்பியோ, வைகோ போன்ற ஆட்களை நம்பியோ நீங்கள் போராட்டக் களத்தில் இறங்காதீர்கள்.
மதிமுக உறுப்பினரான கணேச மூர்த்தி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். அவர் சொல்கிறார், நான் மதிமுக நபர் கிடையாது, திமுக நபர் என்று. அவரின் அந்த பேச்சைக் கேட்டு தூக்குப் போட்டு இறந்திருக்க வேண்டாமா வைகோ.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சொல்கிறார், ‘மாணவர்கள் களமிறங்கிவிட்டார்கள். நாங்கள் வென்றுவிடுவோம்' என்று. தன்னை நம்பியோ, திமுக தலைவர் ஸ்டாலினை நம்பியோ அவர் பேசவில்லை. மாணவர்களைத்தான் நம்புகிறார்.
உங்களை பகடைக்காயாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் வைகோ போன்ற நபர்களை நம்பாதீர்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா புரட்சி நடந்தது. அதில் பலர் வந்து பேசினார்கள். பலர் கலந்து கொண்டனர். ஆனால், கடைசியில் போலீஸிடம் சிக்கியது யார். அப்போது சிக்கிய 600, 700 பேர் யார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். யாரையாவது நம்பி களமிறங்கினால் கடைசியில் பாதிக்கப்படப் போவது நீங்கள்தான். உஷாராக இருந்து கொள்ளுங்கள்,” என்று உரையாற்றினார்.