இன்று ஓய்வுபெறவிருந்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் இன்னும் ஓராண்டுக்கு வழக்கை விசாரிப்பார் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையிலான டீம் விசாரணை நடத்தி வந்தது. இதில் பல இடங்களில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதற்கிடையே பொன் மாணிக்கவேலின் விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர். மிக முக்கியமாக, இன்று ஓய்வு பெறவிருந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தனர்.
பொன் மாணிக்கவேல் இன்னும் ஓராண்டுக்கு சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம்.வரவேற்கிறேன். என்று கூறியுள்ளார்.