திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயக்குமார் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
'காந்தி வாழ்க... காமராஜர் வாழ்க...' என்ற முழக்கத்துடன் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கே.ஜெயக்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்த 2 நாட்களாக பதவியேற்று வருகின்றனர். உறுப்பினர்கள் தங்களது வட்டார மொழியில் உறுதிமொழி பிரமாணத்தை படித்து பதவியேற்றுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கே.ஜெயக்குமார், தமிழில் உறுதி மொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பின்போது அவர் வாசித்த உரை -
''மக்கள் சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர். குப்புசாமி ஜெயக்குமார் எனும் நான் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பில் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன். காந்தி ஜி வாழ்க... பாபாசாகிப் அம்பேத்கர் வாழ்க... தந்தை பெரியார் வாழ்க... காமராஜர் வாழ்க...''
உறுதி மொழி பிரமாணத்தை வாசித்த பின்னர், மக்களவையின் தற்காலிக சபாநாயகர் டாக்டர். வீரேந்திரகுமாரை அவரது இருக்கைக்கு சென்று சந்தித்து ஜெயக்குமார் எம்.பி. வாழ்த்துப் பெற்றார்.
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கே. ஜெயக்குமார், அவரை எதிர்த்து களத்தில் நின்ற அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை விட சுமார் 3.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.