This Article is From May 11, 2020

'விழுப்புரத்தில் சிறுமியை எரித்து கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்' - விஜயகாந்த் வலியுறுத்தல்

சிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகை மற்றும் டிவி சேனல்களில் வெளியான செய்திகளைக் கொண்டு தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.

'விழுப்புரத்தில் சிறுமியை எரித்து கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்' - விஜயகாந்த் வலியுறுத்தல்

கட்சிப் பொறுப்பில் இருந்து கலியபெருமாள், முருகன் ஆகியோரை நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • விழுப்புரத்தில் சிறுமியை எரித்தவர்களை தூக்கிலிட வேண்டும்
  • தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வலியுறுத்தல்
  • சிறுமி உயிருடன் எரிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

விழுப்புரத்தில் பள்ளிச்சிறுமி எரித்துக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ, முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வை அறிந்து மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாணவியை தீ வைத்து எரித்ததாக அதிமுகவை சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். இருப்பினும் இந்த கொடிய செயலை செய்தவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக செயல்பட்டு இந்த மிருக குணம் படைத்தவர்களுக்கு உட்சபட்ச தண்டனையை அவசியம் வாங்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இனி வருங்காலங்களில் எவரும் இத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடாத வண்ணம் தண்டனை வழங்க வேண்டும்.

மாணவி ஜெயஸ்ரீயை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவி ஜெயஸ்ரீயின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகை மற்றும் டிவி சேனல்களில் வெளியான செய்திகளைக் கொண்டு தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 7 நாளில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று கட்சிப் பொறுப்பில் இருந்து கலியபெருமாள், முருகன் ஆகியோரை நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.

.