New virus in China Hantavirus: ‘ஹன்டா வைரஸ் என்பது பெருச்சாலி மற்றும் தொற்றுண்ணிகளால் பரவும் நோய்'
ஹைலைட்ஸ்
- ஹன்டா வைரஸால் சீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
- 32 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டுள்ளது
- ஹன்டா வைரஸ் எலிகள் போன்ற உயிரினங்களால் பரவக்கூடியது
Hantavirus: உலகமே கொரோனா வைரஸை எதிர்கொள்ளப் போராடி வரும் நிலையில், ‘ஹன்டா வைரஸ்' காரணமாக ஒருவர் சீனாவில் இறந்துள்ளதாக வரும் செய்தி பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்' செய்தித் தாள் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும், ஹன்டா வைரஸால் இறந்த நபர் பயணித்த பேருந்தில் பயணம் செய்த 32 பேருக்கு, வைரஸ் தொற்று இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி), ‘ஹன்டா வைரஸ் என்பது பெருச்சாளி மற்றும் தொற்றுண்ணிகளால் பரவும் நோய். உலகம் முழுவதும் பல இடங்களில் இதன் தாக்கம் உள்ளன. பாதிக்கப்பட்ட உயிரினத்தின் மூத்திரம், கழிவு, எச்சில் அல்லது அந்த உயிரினம் கடித்தாலோ இந்த நோய் பரவும்' என்று தகவல் சொல்கிறது. சிடிசி கொடுக்கும் தகவல்படி இந்த நோய் குறித்து மேலும் தெரிந்து கொள்வோம்.
ஹன்டா வைரஸுக்கான அறிகுறிகள்:
ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் சோர்வு, காய்ச்சல், தசை வலி ஏற்படலாம். குறிப்பாகத் தொடைப் பகுதி, இடுப்புப் பகுதி, முதுகுப் பகுதி மற்றும் தோள்பட்டைப் பகுதிகளில் அதிக வலி இருக்கும். மேலும் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மற்றும் பேதி ஏற்படலாம்.
வைரஸ் பாதித்த 4-10 நாட்களுக்குப் பின்னர்தான் அதிக அறிகுறிகள் தென்படும். குறிப்பாக இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கும். இந்த வைரஸால் எச்பிஎஸ் என்னும் நோய் வந்தால், 38 சதவிகிதம் இறக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் எச்.எப்.ஆர்.எஸ் என்னும் நோய் இந்த வைரஸால் வந்தால், 1 அல்லது 2 வாரங்களிலேயே நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் என்றாலும், சில நேரங்களில் 8 வாரங்கள் வரைகூட எடுக்கலாம்.
பாதிக்கப்பட்ட நபருக்கு திடீர் தலைவலி, வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் அதிக வலி, காய்ச்சல், மங்கலாகக் கண் தெரிவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் கண் சிவத்தல் மற்றும் அரிப்பு ஏற்படலாம். இந்த வைரஸால் 1 சதவிகித உயிரிழப்பே ஏற்படுகிறது.
இதற்கான சிகிச்சை என்ன?
ஹன்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு முறையான மருந்து இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நோய் இருப்பது உடனடியாக கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை, ஐசியூ-வில் வைத்து சிகிச்சை கொடுத்து காப்பாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைரஸிடமிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது?
எலிகள் பெருக்கத்தைத் தடுப்பதுதான் இந்த வைரஸ் தொற்றை வரவிடாமல் தடுப்பதற்கு முதல் வழி எனப்படுகிறது. எலிகளால் பாதிப்படைந்த பகுதிகளைச் சுத்தம் செய்யும் போது, அதன் மூத்திரம், கழிவு, எச்சில் உள்ளிட்டவற்றிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.