இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் 32வது பிறந்தநாள் இன்று. இந்திய அணிக்காக 226 ஒருநாள், 78 டி20 மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளை ரெய்னா ஆடியுள்ளார். மொத்தமாக இந்திய அணிக்கு 7 சதங்கள் மற்றும் 48 அரைசதங்கள் உட்பட 7988 ரன்களை குவித்துள்ளார். அவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
- சுரேஷ் ரெய்னா 16 வயதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தவர். முதல் போட்டியிலேயே 72 ரன் குவித்து அசத்தினார். ராயுடு மற்றும் இர்ஃபான் பதான் இவரது சக வீரர்களாக இருந்தனர்.
- 18 வயதில் இந்திய அணிக்கு ஆட அழைக்கப்பட்டவர் சுரேஷ் ரெய்னா.
- முதல் ஒருநாள் போட்டியில் முரளிதரன் பந்தில் டக் அவுட் ஆனார். இதற்குமுன் ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷிகர் தவான் மட்டுமே முதல் போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தனர்.
- ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார். 2 சதங்கள் மற்றும் 34 அரை சதங்களுடன் 4985 ரன்கள் குவித்துள்ளார். சிஎஸ்கே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடியுள்ள இவர், சிஎஸ்கே அணியின் ''சின்ன தல'' என்று அழைக்கப்படுபவர்.
- ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் ரெய்னாதான். 280 போட்டிகளில் 4 சதங்களுடன் 7929 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கேப்டன் கோலி 236 ஆட்டங்களில் 4985 ரன்கள் குவித்துள்ளார்.
- டி20 போட்டிகளில் அதிக சதங்கள் குவித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை விராட் கோலியுடன் பகிர்ந்துள்ளார். இருவரும் 4 சதங்கள் குவித்துள்ளனர், 6 சதங்களுடன் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார்.
- டி20 போட்டிகளில் இந்தியாவின் மிக இளம் வயது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர். 23 வயதில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.
- இந்திய ஒருநாள் அணியை வழிநடத்திய இளம் கேப்டன் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
- இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் சுரேஷ் ரெய்னா தான்.
- இந்திய அணியின் வெற்றிகரமான 55 ரன் சேஸ்களில் சுரேஷ் ரெய்னா பேட் செய்துள்ளார். அதில் ரெய்னாவின் ஸ்ட்ரைக் ரேட் 101.74. இது கோலி, தோனியின் ஸ்ட்ரைக் ரெட்டுடன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.