முன்னதாக இன்று காலையில் சென்னை கிரவுண்ட் பிளாசாவில் அதிமுக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில் அதிமுக - பாமக கூட்டணி இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகை தந்ததார். மதியம் வரை நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக பாமக இடையே கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிமுக பாஜவுடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக தெளிவாக அறிவித்துவிட்டது. எனினும், முன்னதாகவே கூட்டணியை உறுதி செய்த திமுக - காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தொகுதி பங்கீடு விவரங்களை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி ஆலோசனை மேற்கொண்டார். 3 மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், உடுன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸூக்கு 8 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப்பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.