Teachers' Day: ஆசிரியர் பணி என்பது ஓர் ஆத்மார்த்தமான பணி.
Teachers' Day 2019: ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்களிப்பை பறைசாற்றும் விதமாகவே இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். 1888 ஆம் ஆண்டு பிறந்த இவர் தத்துவத்துறையில் சிறந்து விளங்கியதுடன் “The Philosophy of Rabindranath tagore" என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். சென்னை பிரசிடென்சி காலேஜ் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் 1931 முதல் 1936 வரை ஆந்திர பிரதேச பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்தார். மேலும் தொடர்ந்து 16 வருடங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது ஆசிரியர் பணியின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு, இவரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அறிவித்தது. டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆசிரிய தொண்டை பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நாளை சிறப்பிக்கும் விதமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான நல்லிணக்கம், பங்களிப்பு போன்றவை கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணியையே சுவாசமாக கொண்டு ஆசிரிய தொண்டாற்றிக் கொண்டிருக்கும் சில ஆசிரியர்களிடம் பேசினோம். அவர்களின் பணி அனுபவம், நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்துள்ளனர் என்பது NDTV தமிழ் தளத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.
”உங்களுக்காக தான் படிச்சேன் மிஸ்” - மனம் உருகுகிறார் ஆசிரியை தீபா!!
”நான் என் ஆசிரிய பணியை தொடங்கி 20 வருடமாகுது. எல்.கே.ஜி வகுப்பு ஆசிரியையா சேர்த்து இப்போ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கும் பாடம் எடுக்கிறேன். வருடாவருடம் நான் வகுப்பெடுக்கும் வகுப்பில் குறைந்தபட்சமாக ஐந்து சென்டம் காட்டிடுவேன்றதுல எனக்கு ரொம்பவே பெருமை. ஒருநாள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போறதுக்காக பஸ்ல காத்திட்டு இருந்தப்போ ஃபோன் வந்துச்சு. எடுத்ததும், ”தீபா மிஸ் எப்படி இருக்கீங்க? நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சோஷியல் சயின்ஸ்ல சென்டம் எடுத்ததுக்கு நீங்கதான் மிஸ் காரணம். இப்போ நான் எம்.பி.பி.எஸ் ஃபைனல் இயர் படிக்குறேன். மற்ற சப்ஜெக்ட் எல்லாம் பிடிக்காம, மார்க் எடுக்கணுமேனு பயத்துல படிச்சேன். ஆனா, உங்க சப்ஜெக்ட் மட்டும்தான் மிஸ் உங்கள பிடிச்சு, உங்களுக்காக படிச்சேன்” ன்னு என் ஸ்டூடண்ட் சொன்னத கேட்டதும் மனசுல அவளோ சந்தோஷமா இருந்துச்சு. எல்லா ஆசிரியர் தினத்துலயும், என் ஸ்டூடண்ட்ஸ் எனக்கு நிறைய கடிதங்கள கிரியேட்டிவ்வா எழுதி தருவாங்க. அது எல்லாத்தையும் வீட்டு எடுத்துட்டு வந்து படிப்பேன். அதுல அவ்வளவு அன்பு இருக்கும்” என்று உருக்கமாக தன் அணுபவத்தை பகிர்ந்தார் கரூர் மாவட்டத்தை சேர்த்த ஆசிரியை தீபா.
"என்னையே எனக்கு வரைஞ்சு குடுத்து வாழ்த்து சொன்னாங்க!!" - ஆசிரியர் சிவபாலன்!
”திருப்பூர் மாவட்டத்துல இருக்கிற தனியார் பள்ளியில் ட்ராயிங் டீச்சரா இருக்கேன். அடிக்கடி வேற பள்ளி, கல்லூரிகளுக்கு டெமோ க்ளாஸ் எடுக்க போவது வழக்கம். சமீபத்துல ஒரு கல்லூரிக்கு வகுப்பெடுக்க போயிருந்தேன். அங்க, காலேஜ் டாப்பர்க்கு பரிசு கொடுக்கிற நிகழ்வு நடந்துட்டு இருந்துது. டாப்பர் ரேங்க் எடுத்த பொண்ணு மைக்ல பேசும்போது, ”நான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்களுக்கு இவருதான் ட்ராயிங் மாஸ்ட்ரா இருந்தாரு. இப்போ இங்க டெமோ க்ளாஸ்க்கு வந்திருக்காரு. எனக்கு இந்தளவுக்கு வரைய வரும்னு உணர்த்துனதே எங்க சார் தான். கலர் மிக்ஸ் பண்றது தொடங்கி எல்லா நுணுக்கங்களையும் அவ்வளவு பொறுமையா சொல்லி குடுத்திருக்காரு” ன்னு சொல்லி என்னை கைக்காட்டினாங்க. அதை நான் துளியும் எதிர்பாக்கல. அதிர்ச்சில உறைஞ்சி போயிட்டேன். அந்த வருடமே, ஆசிரியர் தினத்தன்று என்னையவே எனக்கு வரைஞ்சு பரிசா கொடுத்தப்போ ரொம்பவும் உணர்வு பூர்வமா இருந்துச்சு” என்கிறார் ஆசிரியர் சிவபாலன்.
"ஆசிரியர்களுக்கான அங்கீகாரமே மாணவர்கள் தான்" - ஜெயந்தி!
”மாணவர்கள்கிட்ட இருந்து தான் நான் நிறைய கத்துக்கிறேன். அறிவு தேடலுக்கான வித்தாகவே நான் மாணவர்களை பார்க்கிறேன். வாழ்நாள் முழுவதுமான கற்றல் என்பது நிச்சயம் ஆசிரியர்களுக்கு தான் என்பதே என்னோட கருத்து. கல்லூரி படிப்ப முடிச்ச பிறகு, எதோ ஒரு கம்பெனில நேர்முக தேர்வுல செலக்ட் ஆகிட்டா, எனக்கு கால் பண்ணி, மேம், வேலை கிடைச்சிருக்கு. அம்மாக்கு அடுத்து உங்களுக்குத்தான் கால் பண்றேன்னு சொல்லு வாங்க. அந்த தருணம் ரொம்ப நெகிழ்வா இருக்கும். அதேபோல, பட்டமளிப்பு விழாவுல கலந்துகிட்ட என்னோட ஸ்டூடண்ட்ஸ், சர்டிஃபிகேட் வாங்கினதும் என் கையில வந்து குடுப்பாங்க. என் பிள்ளைங்களோடதுனு உரிமையா எடுத்து கைல வச்சுக்கும்போது ரொம்ப பெருமையாவும், உலகையே சாதிச்சுட்டதா கர்வமாவும் இருக்கும்” என்கிறார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தலைமை ஆசிரியை ஜெயந்தி.
"ஆசிரியப் பணியே அறப்பணி" - பெருமிதம் கொள்ளும் தீபா அருண்பிரகாஷ்!!
”நிறைய குழந்தைங்க, வீட்ல பெத்தவங்க சொன்னாக்கூட கேட்க மாட்டாங்க. ஆனா ஸ்கூல்ல சொல்லி கொடுக்கிறத, அதுவும் ஒரு குழந்தைக்கு ஏற்ப அன்பாக சொல்லும்போது, அதை அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க. என்கிட்ட நிறைய பேரண்ட்ஸ் வந்து, மிஸ், க்ளாஸ்ல நீங்க என்ன சொல்றீங்களோ அத ரொம்பவே கண்டிப்பா என் பையன் ஃபாலோ பண்றான்னு சொல்லும்போது அவ்ளோ மன நிறைவா இருக்கும். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத போறப்போ, எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க மிஸ்னு சொல்லி என் கால்ல விழுந்தாங்க. ரொம்ப உணர்வு பூர்வமாகவும், கண்கலங்கவும் வைத்த தருணம் அது. ஒரு குழந்தை பயமில்லாம, தனக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள ஆசிரியர்கிட்ட பகிர்ந்துக்க முடியுதுனா அதுதான் நான் செய்யக்கூடிய பணியை முழுமையானதாக உணர வைக்குது. குழந்தைங்க நம்மகிட்ட காட்டுற அன்பு, மரியாதை எல்லாமே என் பணியை மேலும் சிறப்பா செய்ய ஒரு தூண்டுதலா இருக்கு. அதோட இந்த ஆசிரியர் பணியை முழு மனதுடனும், ஈடுபாட்டுடனும் செய்றதுல அலாதியான நிம்மதி கிடைக்குது. என் பணியை பாராட்டி சிறந்த ஆசிரியைக்கான விருதை 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டு, லைன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்டது எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்து, பணியில் என் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகரித்துள்ளது” என்கிறார் சென்னையை சேர்ந்த உதவி தலைமை ஆசிரியை தீபா அருண்பிரகாஷ்.
"என் ஸ்டூடென்ஸ் எல்லாமே என் பிள்ளைங்கதான்" - பூங்கொடி!!
”கடந்த பத்து வருஷமா விளையாட்டு ஆசிரியையா இருக்கேன். கல்லூரில படிக்கிற பிள்ளைங்க எல்லாமே என்னைய அம்மான்னு தான் கூப்பிடுறாங்க. அம்மான்னு கூப்பிடுற அளவுக்கு எல்லா பிள்ளைங்க மனசுலயும் நான் இடம் பிடிச்சிருக்கேன்னு நினைக்கும்போது மகிழ்ச்சியின் உச்சிக்கே போயிடுறேன். ஒருமுறை, தென்னிந்திய அளவிலான கபடி போட்டிக்கு என் மாணவர்களோடு போயிருந்தேன். அங்க என் பிள்ளைங்க ஃபைனல் மேட்ச் வரைக்குமே உயிர கொடுத்து விளையாடினாங்க. இறுதில கப் ஜெயிக்க முடியாம போயிடுச்சு. இருந்தபோதிலுமே, ஃபைனல் வரைக்கும் நின்னு ஆடிருக்காங்கனு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருந்துச்சு. போட்டியில தோல்வி அடைஞ்சிட்டோம்னு வருத்தமாவும் இருந்துச்சு. அந்த தருணத்த மறக்கவே முடியாது. பிள்ளைங்க எல்லோருமே என்னை அவங்க குடும்பத்துல ஒரு ஆளா தான் பாக்குறாங்க, நடத்துறாங்கன்றதுதான் எனக்கு கிடைச்ச அங்கீகாரம்னு சொல்லுவேன்” என்கிறார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு ஆசிரியை பூங்கொடி.
"எங்க டீச்சர் எனக்கு அம்மா மாதிரின்னு சொல்லி நடிகர் சூர்யாவை சிலிர்க்க வச்சுட்டா என் மாணவி" - ஆனந்தத்தில் ஆசிரியை விசாலாட்சி!!
”18 வருஷமா திருநெல்வேலில இருக்கிற மிடில் ஸ்கூல்ல தான் வேலை பார்க்கிறேன். எனக்கு எப்பவுமே பிடிச்ச வகுப்பு ஒன்றாம் வகுப்பு தான். அந்த பிள்ளைங்ககிட்ட இருக்கிற அன்பு அவ்வளவு பரிபூரணமா இருக்கும். உதாரணத்துக்கு சொல்லணும்னா, இப்போ வரைக்குமே எங்க பள்ளில வகுப்பெடுக்கும்போது தரையில பாய் விரிச்சு அதுல உக்கார்ந்து, பிள்ளைங்கள வட்டமா உட்கார சொல்லுவோம். அப்போ கொஞ்ச நேரம் கால் வலிக்குதேனு நீட்டி வைப்பேன். அதை பார்த்ததுமே என் பிள்ளைங்க எல்லோரும்,” டீச்சருக்கு கால் வலிக்குதோ! நாங்க நல்லா தள்ளி உட்கார்ந்துக்கிறோம். நீங்க நல்லா கால் நீட்டி சௌகரியமா உட்கார்ந்துக்கோங்க”ன்னு சொல்லுவாங்க. அந்த பிஞ்சு குழந்தைகளோட அன்பும் அக்கறையும் என் மனசுல பசுமையா இருக்கு. நான் அடிக்கடி என் மகனை பார்க்க சென்னை வருவேன். அடையார்ல இருக்கிற “மட் காபி” கடைக்கு போறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கிருந்து வரும்போது நிறைய கப் எடுத்துட்டு வருவேன். ஒவ்வொரு கப்லையுமே ஏதோ ஒரு காய்கறி விதைய போட்டு இத நீ ரொம்ப பத்திரமா வளர்க்கணும்னு சொல்லி என் பிள்ளைங்களுக்கு கொடுப்பேன். இங்கிருந்தே அவங்களோட பொறுப்புணர்ச்சி தொடங்கும். செடிகள பராமரிக்கிறத பார்க்கும்போதே அவ்ளோ இனிமையா இருக்கும். ஒருமுறை நடிகர் சூர்யா நடத்திவரும் அகரம் நிறுவனம் சார்பாக வறுமை கோட்டிற்கு கீழுள்ள, நல்ல மார்க் எடுத்த குழந்தைகளுக்கு பரிசு கொடுத்தாங்க. அப்போ நடிகர் சூர்யா, உனக்கு என்ன பிடிக்கும்னு என் க்ளாஸ் பிள்ளைங்க கிட்ட கேட்டாரு. எனக்கு எங்க டீச்சர் தான் பிடிக்கும்னு குழந்தை சொல்லுச்சு. ஏன் பிடிக்கும்னு அவரு திரும்ப கேட்ட கேள்விக்கு, எங்க டீச்சர் எனக்கு அம்மா மாதிரினு சொல்லி என்னைய கண்கலங்க வைச்சுடுச்சு” என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த ஆசிரியை விசாலாட்சி.
ஆசிரியர் பணி என்பது ஓர் ஆத்மார்த்தமான பணி. அர்ப்பணிப்பு, தியாக உணர்வு, அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு போன்ற உணர்வின் மொத்த உருவம் தான் ஆசிரிய பணி. வெறுமனே பணம் ஈட்டுவதற்கான பணியாக இல்லாமல் ஒழுக்கம், அறிவாற்றல், சிந்தனை திறன், ஈடுபாடு போன்ற ஞானத்தை புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு நிகர் ஆசிரியர்கள்தான். ஒவ்வொரு குழந்தையுமே எதிர்காலத்தின் தூண்கள்தான். அதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் சிறப்பான பணி ஆசிரியப் பணி. மேலும் நம் வாழ்வில் நமக்கு ஒவ்வொரு நொடியும், யாராவது எதாவது பாடத்தை கற்பித்து கொண்டேதான் இருக்கிறார்கள். வாழ்க்கை பாடம் புகட்டும் ஒவ்வொருவருமே ஆசிரியர்கள் தான் என்பதை கூறிக்கொண்டு வாழ்க்கையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களுக்கு NDTV தமிழின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்...