Haryana Election 2019: ஹரியானா பாஜக எம்.எல்.ஏ., பாக்சிஸ் சிங் விர்க், வீடியோவை ராகுல் தனது ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.
New Delhi: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும், ஒவ்வொரு வாக்குகளும் ஆளும் கட்சிக்கே செல்லும் என ஹரியானா பாஜக வேட்பாளர் ஒருவர் அறிவித்ததற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி,'இவர் தான் பாஜகவிலே மிகுந்த நேர்மையான தலைவர்' என தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கிய பாஜக எம்.எல்.ஏ குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதனிடேய, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் எங்களுக்கு தெரிந்துவிடும், எங்களுக்கு தெரியாது என்று நினைக்காதீர்கள். நாங்கள் உங்களிடம் பகிரங்கமாக காட்டிக்கொள்ள மாட்டோம். எனினும், எங்களுக்கு தேவையென்றால், எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் யார் என்று கண்டுபுடிப்போம். எனென்றால், மோடிஜி மகுந்த புத்திசாலியானவர். முதல்வரும் புத்திசாலி என பாஜக எம்.எல்.ஏ., சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார். மேலும், அந்த வீடியோ சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
தனது பேச்சில் பெரும் பகுதியில் எச்சரிக்கை விடுப்பது போலவே அவர் பேசுகிறார். தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளப்படும் என்றும், நீங்கள் யாருக்கு வாக்கு அளித்தாலும், உங்களது வாக்கு பாஜகவுக்கு மட்டுமே பதிவாகும். நீங்கள் எந்த பொத்தானை அழுத்தினாலும், உங்கள் வாக்கு பாஜகவிற்கே பதிவாகும் என பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து, தேர்தல் ஆணையம் பாஜக எம்.எல்.ஏ., பாக்சிஸ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அந்த குறிப்பிட்ட தொகுதியை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்களையும் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாக்சிஸ் கூறும்போது, வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தான் எந்த கருத்தும் கூறவில்லை என்றும், சிலர் திட்டமிட்டு பொய்யான வீடியோவை பரப்பி வருகின்றனர் என்றார். நான் தேர்தல் ஆணையத்தை மதிக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் அது பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.
இதுபோன்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது என் மீதும், எனது கட்சியின் மீதும் அவதூறு பரப்பு செயல் என்று அவர் கூறியுள்ளார்.