Election in Haryana: மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 78 இடங்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. (PTI)
New Delhi: ஹரியானா (Haryana) மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக (BJP) சார்பில் போட்டியிடப் போகும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னால் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரரான யோகேஷ்வர் தத் (Yogeshwar Dutt) மற்றும் வீராங்கனை பபிதா போகட் (Babita Phogat) உள்ளிட்டோரும் பாஜக பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 78 இடங்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேற்று சந்தித்ததைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு நடந்த ஹரியானா தேர்தலின்போது, பாஜக 47 இடங்களில் வெற்றியடைந்தது. காங்கிரஸ் 15 இடங்களைக் கைப்பற்றியது. இந்திய தேசிய லோக் தளம் கட்சி 19 இடங்களைப் பிடித்தது. மீதமிருக்கும் 2 இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் வென்றனர்.
ஹரியானாவில் தற்போது மிகப் பெரும் பேசு பொருளாக இருப்பது தேசிய குடிமக்கள் பதிவேடான NRC பட்டியல். இந்தப் பட்டியல் மூலம் மாநிலத்தில் சட்டத்துக்கு எதிராக குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனப்படுகிறது. சமீபத்தில்தான் அசாம் மாநிலத்துக்கான என்ஆர்சி பட்டியல் வெளியிடப்பட்டது.
நவம்பர் 2 ஆம் தேதியுடன் ஹரியானா சட்டமன்றத்தின் காலக்கெடு முடிவடைகிறது. மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஹரியானாவும் வரும் அக்டோபர் 21 ஆம் தேர்தலை சந்திக்கும். 3 நாட்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக, தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். ஹரியானாவில் 1.98 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் 8.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.