This Article is From Oct 16, 2019

’தங்கல்’ திரைப்படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் கூறினார்: பிரதமர் மோடி

கடந்த ஆகஸ்ட் மாதம் மகாவீர் சிங் போகாத்தும், அவரது இரண்டாவது மகள் பாபிடா போகாத்தும் பாஜகவில் இணைந்தனர்.

ஹரியானாவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி

New Delhi:

'தங்கல்' திரைப்படம் பார்த்ததாக என்னிடம் கூறிய சீன அதிபர் ஜின்பிங், அதில் இந்திய மகள்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும் கூறினார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

அமீர்கான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் தங்கல். குத்து சண்டை வீரரான மகாவீர் சிங், அவரது மகள்களை சர்வதேச குத்து சண்டை வீரராக உருவாக்கி, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

உலக அளவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று மிகப் பெரும் வசூலை வாரிக் குவித்தது. அந்தப் படம் வெளியான பிறகு, மகாவீர் சிங் போகாத் அவர்களது மகள்களும் குத்துச் சண்டை வீரர்களுமான கீதா போகாத், பாபிடா போகாத் ஆகியோர் தேசிய அளவில் அடையாளம் பெற்றனர்.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மகாவீர் சிங் போகாத்தும், அவரது இரண்டாவது மகள் பாபிடா போகாத்தும் பாஜகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், ஆளும் பாஜவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் பாபிடா போகாத் களமிறக்கப்பட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து, ஹரியானாவில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாபிடா போகாத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடனான முறைசாரா சந்திப்பின் போது, ஜின்பிங் 'தங்கல் திரைப்படத்தை தான் பார்த்ததாகவும்', அதில் இந்திய மகள்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும் என்னிடம் தெரிவித்தார். இதை கேட்டதும் ஹரியானாவை நினைத்து நான் பெருமை அடைந்தேன் என்று அவர் கூறினார். 

பிரதமரின் வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்த பாபிடா போகாத், தங்கல் திரைப்படத்தையும் அவர் பாராட்டியதாக தெரிவித்தார். நான் கண்டிப்பாக இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக கூறுகிறேன் என்றார்.   

With input from PTI, ANI

.