Haryana election results: துயஷ்ந்த் சவுதாலா 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
New Delhi: ஹரியானா மாநில தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைய உதவ வேண்டிய நிலையில் கிங் மேக்கராக, துஸ்யந்த் சவுதாலா திகழ்கிறார். அவர் காங்கிரஸ் அல்லது பாஜகவில் யாருக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதை பொருத்தே ஹரியானா அரசியலில் அடுத்த நகர்வு அமையும்.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக அதிகபட்சமாக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜேஜேபி எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக ஜனநாயக ஜனதா கட்சி உருவெடுத்துள்ளதால் துஷ்யந்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைப்பதற்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த தேர்தலில் பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது பெரும்பான்மையை பெறத் தவறியதை அடுத்து நேற்றைய தினம் ஹரியானா மாநில பாஜக தலைவர் பொறுப்பை சுபாஷ் பராலா ராஜினாமா செய்தார்.
இதனிடையே கர்நாடகா பாணியில் ஹரியானாவில் முதல்வர் பதவியை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு விட்டுக்கொடுத்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக துஸ்யந்த் சவுதாலா கூறும்போது, நாங்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆட்சி அமைவது ஜேஜேக கையிலே உள்ளது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.