Haryana Elections 2019: சோனியா காந்திக்கு பதிலாக ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
New Delhi: அரியானாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், திடீர் என கூட்டத்தில் கலந்த கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் ட்வீட்டர் பதவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த ட்வீட்டர் பதவில், அவருக்கு பதில் அவரது மகன் ராகுல் காந்தி இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 24 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவித்திருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரியானாவின் மஹேந்திரகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சோனியாகாந்தியின் பிரச்சார பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவி்க்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டதை முக்கிய விவகாரமாக பாஜக பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைவர் பதிவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, கட்சியில் காந்தி குடும்பத்தை சாராத எவருக்காவது தலைவர் பதவி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
With inputs from PTI