Haryana elections 2019: ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா பதவி விலக முன்வந்துள்ளார்.
New Delhi: ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 46 பெற்றால் பெரும்பான்மையை பெறலாம் என்ற நிலையில், பெரும்பான்மையை அடைய முடியாமல் பாஜக திணறி வருகிறது. இதனிடையே, கட்சி எதிர்பார்த்தது போல் தான் செயல்படவில்லை, என்ற காரணத்திற்காக ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா பதவி விலக முன்வந்துள்ளார்.
ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில், ஹரியானாவில் இழுபறி நீடிக்கிறது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க 37 இடங்களிலும் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில், எதிர்பாராதவிதமாக துஸ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. துஷ்யந்த் சவுதலாவின் ஜனநாயக ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
மூன்றாவது பெரிய கட்சியாக ஜனநாயக ஜனதா கட்சி உருவெடுக்கும் சூழல் உள்ளதால் துஷ்யந்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைப்பதற்கு பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் முயற்சி செய்கின்றன
இதனிடையே, ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா, தான் போட்டியிட்ட தோஹானா தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட ஜேஜேக கட்சி வேட்பாளரிடம் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளார்.
தொடர்ந்து, முக்கிய பேச்சுவார்த்தை நடத்த ஹரியானா முதல்வர் காத்தாரை டெல்லி வரும் படி உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
பா.ஜ.கவுக்கு ஜே.ஜே.பியின் ஆதரவு மட்டும் போதும் என்ற நிலை உள்ளது. ஆனால், காங்கிரஸைப் பொறுத்தவரையில் துஸ்யந்த் சவுதாலா ஆதரவு அளித்தாலும், மேற்கொண்டு சுயேட்சைகளின் ஆதரவையும் பெறவேண்டிய கட்டாயம் உள்ளது.