This Article is From Sep 18, 2020

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது: தொல் திருமாவளவன்

பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தனர். அப்படி புலம்பெயர்ந்த மனிதன் ஓரிடத்தில் தங்கிவிடுகிறான். கொரியாவில் தமிழனின் எச்சசொச்சங்கள் இருப்பதாக சொல்லும்போது, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கியதற்கான ஆதாரங்களை காணமுடியும். ஆங்கிலேயர்களின் அடையாளங்களும், இஸ்லாமியர்களின் மிச்சங்களும் அப்படிப்பட்ட ஆதாரங்கள்தான்.

Advertisement
தமிழ்நாடு Posted by

அன்பை விதைப்போம், சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது! என கொரியா தமிழ்ச்சங்க சர்வதேச கருத்தரங்கில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் உரையாற்றியுள்ளார்.

அவர் ஆற்றியுள்ள உரை பின்வருமாறு, “மனிதன் புலம்பெயர்வதும், தங்கிய இடத்தில் தனது மிச்சங்களை விட்டுச் செல்வதும் மனிதகுல வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கிறது. எல்லைகளைத் தாண்டி மனிதன் பரவி வாழ்ந்தான். பல்வேறு காரணங்களுக்காக அவன் உலகின் பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறான். ஆனால், மொழியால், சாதியால், மதத்தால் தங்களை வேறுபடுத்தி, தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைப்பதுதான் ஆபத்தாக முடிகிறது. மனிதன் கண்டுபிடித்த கோட்பாடுகளில் ஜனநாயகம்தான் உயர்ந்த கோட்பாடு என்று தொல்.திருமாவளவன் பேசினார்.

கொரியா தமிழ்ச்சங்கமும், தென்புலத்தாரும் இணைந்து நடத்திய கொரியா தமிழ் உறவுகள் ஒரு பார்வை என்ற சர்வதேச கருத்தரங்கை நடத்தின. இந்த கருத்தரங்கை முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆரோக்கியராஜ், பொறியாளர் சகாய டர்சியூஸ், முனைவர் ராமசுந்தரம், முனைவர் பத்மநாபன், முனைவர் கிறிஸ்டி காத்தரின், பொறியாளர் ஆனந்தகுமார், முனைவர் செ.அரவிந்தராஜ் ஆகியோர் நெறிப்படுத்தினார்கள். கருத்தரங்கில் கொரியா தமிழ் உறவுகள் குறித்து ஒரிசா பாலு, முனைவர் நா.கண்ணன் ஆகியோர் பேசினார்கள். இறுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழன் கடல்கடந்து வணிகம் செய்திருக்கிறான். படைநடத்தி நாடுகளை கைப்பற்றியிருக்கிறான். இவற்றுக்கெல்லாம் இன்றைக்கு ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழன் என்று சொல்லும்போது நமக்கு தலைநிமிர்வு உண்டு. கிடைக்கிற வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு சிறப்புச் சேர்க்கின்றன. குறிப்பாக மனிதகுலம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கவில்லை. புலம்பெயர்தல் என்பது மனிதகுலத்தில் தவிர்க்க முடியாத விஷயம்.

Advertisement

பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தனர். அப்படி புலம்பெயர்ந்த மனிதன் ஓரிடத்தில் தங்கிவிடுகிறான். கொரியாவில் தமிழனின் எச்சசொச்சங்கள் இருப்பதாக சொல்லும்போது, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கியதற்கான ஆதாரங்களை காணமுடியும். ஆங்கிலேயர்களின் அடையாளங்களும், இஸ்லாமியர்களின் மிச்சங்களும் அப்படிப்பட்ட ஆதாரங்கள்தான்.

அப்படியானால், கொரிய மண்ணில் நாம் காணுகிற தமிழின் மிச்சசொச்சங்கள் முக்கியத்துவம் பெற்றவை இல்லையா என்று கேட்கக்கூடும். முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அங்கே கிடைத்திருக்கிற முதுமக்கள் தாழிகள், சுமைதாங்கிக் கற்கள், எழுத்துருக்கள் எல்லாம் நமக்கு சிறப்புச் சேர்ப்பவைதான். நமக்கும் அவர்களுக்குமான தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. பொதுவாக ஒரு தேசத்தில் இன்னொரு இனத்தின் மிச்சங்கள் காணக்கிடைக்கின்றன என்றால் ஒன்று தமிழர்கள் அங்கே தங்கி இனக்கலப்பால் புதிய இனமாக உருமாறியிருக்க வேண்டும். அல்லது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தங்கள் கலாச்சாரத்தை பரப்பியிருக்க வேண்டும்.

Advertisement

ஒரு முக்கியமான விஷயம் மனிதன் ஒரு எல்லையை வரையறுத்து அதற்குள் முடங்கிக் கிடக்கமுடியாது. இது இயற்கைக்கு எதிரானது. இந்த பூமி எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் எல்லைகளை வரையறுத்துக்கொண்டு, வேலிகளைப் போட்டுக்கொண்டு தனித்துவம் என்ற பெயரால் பாரம்பரிய அடையாளங்களை தக்கவைத்துக்கொண்டு முட்டிமோதிக்கொண்டு நம்மைநாமே பகைத்துக்கொண்டு, அழித்துக்கொண்டு சிதைந்துகொண்டிருக்கிறோம்.

இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பிறக்கிறவர்கள் எல்லாம் எந்த தேசத்தில் போய் வாழமுடியும்? ஆதிகாலத்தில்  மன்னர்கள் இருந்தார்கள் தேசங்கள் இருந்தன என்றாலும், பல்வேறு இனக்குழுக்கள் நாடுவிட்டு நாடு, தேசம்விட்டு தேசம் பரவி இனக்கலப்பு. மொழிக்கலப்பு, கலாச்சாரக் கலப்புகளுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றைக்கு எல்லாவற்றிலும் ஒரு தூய்மைவாதம் பேசுகிறோம். மொழிக்கலப்பு, சாதிக்கலப்பு, மதக்கலப்பு கூடாது என்று பேசுகிறோம். மீறிக் கலந்துவிட்டால் கவுரவக் கொலைகளை நடத்துகிறோம்.

Advertisement

இந்தத் தூய்மைவாதம்தான் தீட்டு என்ற இன்னொரு சிந்தனைப்போக்கையும் வளர்க்கிறது. நமது பாரம்பரியங்களையும் அடையாளங்களையும் தேடும் போக்கு இருக்கட்டும். அவற்றை நமக்கு அடுத்துவருகிற தலைமுறைக்கு சொல்வோம். புத்துணர்வு பெறுவோம். ஆனால் இந்த எல்லைகளைக் கடந்து மனிதநேயம் தழைக்க வேண்டும். சாதியை வைத்தோ, மதத்தை வைத்தோ, மொழியை வைத்தோ மனிதர்களை பிரிக்கும் போக்கு ஆபத்தானது. சாதித் தூய்மைவாதம், மதத் தூய்மைவாதம் உள்ளிட்டவை மனிதநேயத்திற்கு எதிரானது.

நமது வரலாற்றுப் பாரம்பரியங்கள் நமக்கு தலைநிமிர்வைத் தருகின்றன. நமது முன்னோரின் ஆளுமை, போர்த்திறன், இலக்கிய இலக்கண அறிவு நமக்கு சிறப்பைத் தருகின்றன. ஆனால், இன்றைக்கு இருக்கும் தலைமுறை அறிவானது என்றும் முந்தைய தலைமுறை அறிவற்ற சமூகம் என்றும் கருதிவிடக் கூடாது. நமது தந்தை நம்மைக்காட்டிலும் படிப்பறிவு இல்லாதவர் என்ற எண்ணம் கூடாது. தந்தையோ, அவருடைய தந்தையோ, அவருடைய முப்பாட்டனோ, அவருக்கும் முந்திய பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முந்தைய சமூகமோ நம்மைக் காட்டிலும் அறிவானதாக இருந்திருக்கலாம்.

Advertisement

எழுச்சிபெற்று, பின்னர் ஒரு கட்டத்தில் வீழ்ச்சியடைந்து, மீண்டும் எழுச்சிபெற்றுத்தான் இந்த மனிதகுலம் தழைத்துச் செழித்திருக்கிறது. மனிதகுலம் கண்டுபிடித்தவற்றுள், ஜனநாயகக் கோட்பாடுதான் மிகச் சிறப்பானது. ஜனநாயகம்தான் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டுகிறது. தமிழனுக்கு நண்பன் தமிழன்தான் என்றில்லை. தமிழர்களாய் இருக்கிற நமக்கு நண்பர்கள் ஜனநாயக சக்திகள்தான். மொழியால் இனத்தால், நாட்டால் யாராக இருந்தாலும் அவன் ஜனநாயகவாதி என்றால் அவன்தான் நமக்கானவன் என்பதும், அவன்தான் நாம் விரும்புகிற மனிதன். இந்தக் கருத்தரங்கில் என்னிடம் கொரியா தமிழ்ச்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசுகளிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கிறேன்.”

இவ்வாறு பேசினார்.

Advertisement