ஆசிரமத்தின் பணிகள் வழக்கம் போல நடைபெறும் என்று கல்கி பகவான் கூறியுள்ளார்.
Neman: வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியுள்ள சாமியார் கல்கி பகவான், தான்நாட்டை விட்டு தப்பியோடவில்லை என்றும், பக்தர்களை கைவிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவில் பல ஆசிரமங்களை நடத்தி வரும் கல்கி பகவானிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வருமான வரித்றை அதிகாரிகள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சுமார் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
கல்கி பகவானுக்கு சொந்தமான இந்த இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ரூ. 45 கோடி ரொக்கப்பணம், 88 கிலோ தங்கம், 1,271 காரட் வைரம், ரூ. 600 கோடிக்கான பில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தன்னுடைய பக்தர்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை கல்கி பகவான் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
இந்த சோதனைக் காலங்களில் எங்களுக்கு துணையாக என்னை பின்பற்றுபவர்கள் இருந்தனர். எனக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர். இதற்காக எனது பக்தர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அவர்களை கைவிட மாட்டேன். நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. வழக்கம்போல ஆசிரமத்தின் பணிகள் நடைபெறும்.
இவ்வாறு கல்கி பகவான் கூறினார். இந்த வீடியோ பதிவின்போது அவரது மனைவியும் உடன் இருந்தார். ரெய்டு நடத்தியது தொடர்பாக கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாவுக்கும் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.