விலங்குகளை முறையற்ற வகையில் வாகனங்களில் கொண்டு செல்லுவதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் லாரிகளில் மாடுகளை நெருக்கமாக கட்டி, ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மாடுகளையும் பறிமுதல் செய்தள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்த மாடுகளை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அவர், மோட்டார் வாகன சட்டப்படி விலங்குகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வரைமுறைகள் உள்ளது. ஆனால் அவை நடைமுறை படுத்தப்படுவதில்லை.
மோட்டார் வாகன விதியின் படி, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விலங்குகளை வாகனம் மூலம் ஏற்றி செல்லும் போது விலங்குகளுக்கு இடையில் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை பின்பற்றாமல் ஒரே வாகனத்தில் விலங்குகளை அடைத்து போட்டு கொண்டு செல்கின்றனர். இதனால் விலங்குகள் காயப்படுவதோடு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இது தொடர்பாக விலங்கு நல வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிருகவதை தடுப்பு சட்ட பிரிவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மாவட்ட நீதிமன்றமும் இதனை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)