தமிழக அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்க்கபட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், அரசு கொடுக்கும் இலவசங்களால் மாநில மக்கள் சோம்பேறிகளாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேஷன் கடையில் மக்களுக்கு கொடுக்கப்படுவதற்காக, வைக்கப்பட்டிருக்கும் அரிசியைத் திருடி விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றிருக்கும் நடைமுறைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார்.
அப்போது நீதிமன்றம், ‘இலவசமாக அரிசி கொடுப்பதாலும், மற்ற சில பொருட்கள் இலவசமாக கொடுப்பதாலும் தான், தமிழக மக்கள் சோம்பேறிகளாக மாறியுள்ளனர். இதனால், மக்கள் அனைத்தையும் அரசிடமிருந்து இலவசமாக எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் அனைத்து வேலைகளுக்கும் வெளி மாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வரும் நிலை உருவாகியுள்ளது.
இலவச அரிசி என்பது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இது குறித்து அரசு எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். வறுமையால் வாடும் மக்களுக்கு இலவச அரிசி கொடுக்கப்படக் கூடாது என்பது எங்களின் எண்ணம் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்குக் கொடுப்பது நியாயமே. ஆனால், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அரிசி விநியோகம் செய்வது சரியல்ல. வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கும் இலவச அரிசி கொடுக்கப்பட்டால், அது அரசுக்கு பெருத்த நஷ்டத்தை கொடுக்கும்' என்று கூறியது.
அரசு தரப்பு வாதத்தின் போது, 2017-18 ஆண்டில், இலவச அரிசி விநியோகத்துக்கு 2,110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், ‘கடந்த 10 ஆண்டுகளாக இலவச அரிசி விநியோகத்துக்கு, அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்பது குறித்து தெரியபடுத்த வேண்டும். வழக்கு மீண்டும், நவம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்று உத்தரவிட்டது.