அ.இ.அ.தி.மு.க கட்சியின் மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் 102 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘திமுக பொதுக்கூட்டம் நடத்த 20 இடங்களில் பல்வேறு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து இடங்களில் கூட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், கோரிக்கைக்கு ஏற்றவாறு இல்லை. அதிமுக அரசு, வேண்டுமென்றே திமுக கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கின்றது. எனவே, பொதுக் கூட்டங்களை நடத்த திமுக-வுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி மஹாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர், அக்டோபர் 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ள கூட்டங்களுக்காக உயர் நீதிமன்ற அனுமதி அளிக்க வேண்டும் என்ற திமுக-வின் கோரிக்கையை ஏற்று, வழக்கை முடித்து வைத்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)