தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்குக் கீழ் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்விகள் கேட்டு துளைத்துள்ளது.
இடதுசாரி அமைப்பான ‘மக்கள் அதிகாரத்தைச்’ சேர்ந்த ராகவன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமாக போராடி வந்தவர்களில் ஒருவர் ஆவார். அதற்காக அவர் மீது 92 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. அவரை கைது செய்து போலீஸ் விசாரித்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ராகவனுக்கு பிணை வழங்கப்பட்டது. இதையடுத்து போலீஸின் சிபாரிசின் பேரில் தூத்துக்குடி ஆட்சியர் நந்தூரி, ராகவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ராகவனின் மனைவி நீதிமன்றத்தில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் பஷீர் அஹமது ஆகியோர் வழக்கை விசாரித்தனர். ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் நேரில் ஆஜராகி இருந்தார். வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதிகள், ‘குற்றம் செய்யாத எந்த நபரும் தண்டிக்கப்படக் கூடாது. போலீஸ் சொல்லும் அனைத்தையும் ஒரு ஆட்சியர் நம்பி கையெழுத்திடக் கூடாது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு ஏற்கெனவே பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்திருக்கக் கூடாது. இதைப் போன்று மாவட்ட ஆட்சியர் இனியும் நடந்து கொள்ளக் கூடாது. பெயில் வழங்கிய பிறகு போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்குக் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஜனநாயகம் நடக்கிறதா? அல்லது, போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா? ராகவன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டனர்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலையை மூடியது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)