This Article is From Nov 22, 2018

கஜா புயல் நிவாரணம் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வரும் 29 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல் நிவாரணம் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் 50–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் பாதிப்பால் பல இடங்களில் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சார கம்பங்களும் விழுந்து கிடக்கிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மீட்பு மற்றும் புணரமைப்பு பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சமும் வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் இழப்பீடு மற்றும் மின்சார வசதி ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள், சத்தியநாராயணன் மற்றும் சேசஷாயி அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், கஜா புயல் நிவாரணப் பணிகளை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அறிவித்தித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

ஏற்கனவே நிவாரணப் பணிகளை கண்காணிப்போம் என உயர்நீதிமன்றம் அறவித்திருந்த நிலையில், கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

.