தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வரும் 1 மற்றும் 2-வது வகுப்பு மாணவர்களுக்கு ஹோம் ஒர்க் என்று சொல்லப்படும் வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை சிபிஎஸ்இ பின்பற்றவில்லை என்பதால், நீதிமன்றம் கடும் கண்டனம் தெரவித்துள்ளது.
என்.புருஷோத்தமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த புத்தகங்களை மட்டும் தான் சிபிஎஸ்இ அமைப்பு பின்பற்ற வேண்டும் என உத்தரவிட வேண்டும். மேலும் வீட்டுப் பாடத்தை ரத்து செய்யும் விவகாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இது குறித்தான வழக்கு நீதிபதி கிருபாகரனுக்குக் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 மற்றும் 2வது வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்க கூடாது என்று கடந்த மே 29 ஆம் தேதியே உத்தரவிட்டிருந்தோம். சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை என்று தெரிகிறது. இதன் முக்கியத்துவம் தெரியாமல் சிபிஎஸ்இ செயலாளர் இருக்கிறார் என்றும் தெரிகிறது. வரும் 17 ஆம் தேதிக்குள் இதற்கான சுற்றறிக்கையை அவர் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அவர் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று கறாரான உத்தரவை பிறப்பித்தார்.
தொடர்ந்து வழக்கறிஞர் புருஷோத்தமன், ‘தனியார் புத்தக நிறுவனங்களுக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் ஒப்பந்தம் போடப்படுகிறது. இதனால் அவர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைக்கும் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்காமல் தனியார் புத்தகங்களை கொடுக்கின்றனர். தனியார் புத்தகங்களை உபயோகிப்பதற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சிபிஎஸ்இ அதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பது கவனத்துக்குரியது’ என்று சுட்டிக்காட்டினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)