This Article is From Sep 05, 2018

சத்துணவு ஊழல்: முட்டை டெண்டர்களை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கின் பதில் மனுவை தமிழக அரசு வரும் 7 ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்

சத்துணவு ஊழல்: முட்டை டெண்டர்களை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை விநியோகிப்பதற்கான டெண்டர் அறிவிப்பு குறித்து தமிழக அரசு கடந்த 20 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் தமிழகத்தில் உள்ள சிறு விவசாயிகள் பயன்பெற வேண்டும். வெளி மாநிலக் கோழிப் பண்ணையாளர்கள் பங்கு பெறுவதை தடை செய்யவும் தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகளை சமர்பிக்க வேண்டும் என்றும் சில விதிகளை குறிப்பிட்டிருந்தது.

இந்த அரசாணையை எதிர்த்தும், தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், கோழி பண்ணை உரிமையாளர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் விஜய நாராயண் ஆஜராகி, முட்டை கொள்முதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க பல்வேறு நிபந்தனைகள் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்நிலையில், இது தொடர்பான விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டடிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஜெனரல் விஜய நாராயண் ஆஜராகி, இந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை தெரிவித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றார்.

எனவே, இந்த வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும். இந்த வழக்கின் பதில் மனுவை தமிழக அரசு வரும் 7 ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வரும் 20 ஆம் தேதி வரை முட்டை டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.