புழல் பகுதியில் இருக்கும் தனியார் தொடக்கப் பள்ளியான ‘ஸ்ரீ சரவணா வித்யாலயா’-வில் அடிப்படை வசதிகள் இல்லையென்று கூறி, பள்ளிக்கூடத்தை மூட உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
சசிகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர், ‘எனக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா தொடக்கப் பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசிகள் கூட சரியாக இல்லை. ஆனால், கல்வித் துறை அதிகாரிகள் அந்தப் பள்ளி தொடர்ந்து இயங்க அனுமதி கொடுத்தனர். இது குறித்து இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் இடத்தில் வாடகை இருக்க அவர்களுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘சரவணா வித்யாலாயாவில் இருக்கும் கழிவறைகளுக்கு கூரையோ கதவுகளோ இல்லை. மேலும், கழிவறைகளுக்குப் பக்கத்திலேயே பெரிய கட்டடங்கள் இருக்கின்றன. இந்த கட்டடங்களில் இருந்து கழிவறையைப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட ஒரு கழிவறையை பெண் குழந்தைகள் எப்படி பயன்படுத்த முடியும். எனவே, இந்த குறைகளைப் போக்கும் வகையில் அடுத்த ஓர் ஆண்டுக்கு பள்ளியை மூட உத்தரவிடுகிறேன். இந்த காலக்கட்டத்தில் தேவைப்படும் மாற்றங்களை செய்திருக்க வேண்டும். தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளியின் நிலை குறித்து முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரும் ஏன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவில்லை. 2004 ஆம் ஆண்டு கும்பகோனத்தில் நடந்தது போல ஒரு சம்பவம் நடந்தால் தான் பாடம் கற்கப்படுமா? பள்ளிக்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)