This Article is From Aug 20, 2019

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த சர்ச்சை கருத்து: உயர்நீதிமன்றம் வாபஸ்!

ற்போதைய காலகட்டத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது ஏதாவது ஒரு புகார் வந்துகொண்டே இருக்கிறது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த சர்ச்சை கருத்து: உயர்நீதிமன்றம் வாபஸ்!

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது. 

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 34 பேர் அந்தக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். கடந்த மே மாதம், பேராசிரியருடன் மாணவிகள் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்லூரிச் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த சமயத்தில் பேராசிரியர் தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பேராசிரியருக்கு எதிரான புகாரை விசாரித்த நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தனது பணி நீக்க நோட்டீசை ரத்து செய்யக்கோரி, பேராசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அதில், விசாரணைக்குழுவின் அறிக்கையில் மனுதாரர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கல்லூரியின் பணி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, தற்போதைய காலகட்டத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது ஏதாவது ஒரு புகார் வந்துகொண்டே இருக்கிறது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது.

கிறிஸ்தவ நிறுவனங்கள் சிறந்த கல்வியை வழங்கினாலும், அறநெறியை போதிக்கிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். நீதிபதியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், வழக்குக்கு தொடர்பில்லாத கருத்துக்கள் தீர்ப்பில் உள்ளதாக விமர்சனம் எழுந்ததால் தீர்ப்பை நீதிபதி திருத்தினார். தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்க கல்லூரி நிர்வாகம் முறையீடு செய்ததை ஏற்று தீர்ப்பு திருத்தப்பட்டு உள்ளது. 

கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டிருந்த வாசகமும் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. 

.