This Article is From Dec 31, 2018

''கடன் ரத்தால் 60,000 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்'' - மோடிக்கு குமாரசாமி பதில்

கடனை தள்ளுபடி செய்தது தொடர்பாக பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதில் அளித்திருக்கிறார். தேவைப்பட்டால் விவசாயிகள் பலன் அடைந்தது தொடர்பான ஆவணங்களை வெளியிடவும் தயார் என்று அவர் கூறியுள்ளார்

''கடன் ரத்தால் 60,000 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்'' - மோடிக்கு குமாரசாமி பதில்

விவசாயிகள் குறித்த மோடியின் கருத்து சரியானது அல்ல என்றும் துரதிருஷ்டவசமானது எனவும் குமாரசாமி கூறியுள்ளார்.

Bengaluru:

கர்நாடக அரசின் நடவடிக்கையால் 60 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று அக்கட்சி ஆளும், அல்லது கூட்டணி அமைத்துள்ள மாநிலங்களிலும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவற்றை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரசின் நடவடிக்கை கண்துடைப்பு என்றும், அதனால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, '' அரசின் கவனம் தங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். ஆனால் கர்நாடக அரசு திமிர்த்தனமாக நடந்து வருகிறது. சாதாரண மக்கள் வளர்ச்சியை விரும்புகின்றனர். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பரம்பரை மட்டுமே செல்வச் செழிப்புடன் இருக்க விரும்புகின்றனர். கர்நாடக அரசின் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் என்பது மிகப்பெரும் நகைச்சுவை'' என்று பேசினார்.

மோடியின் பேச்சுக்கு கர்நாடக முதல்வர் எச்.டி. குமார சாமி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

மொத்தம் 60 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 350 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சம் விவசாயிகள் பலன் பெற உள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 400 கோடி செலுத்தவுள்ளோம். இன்னும் ஒருவாரத்திற்குள் இந்தப் பணம் செலுத்தப்படும்.

கூட்டுறவுத்துறையில் இடைத் தரகர்களாக செயல்பட்டவர்கள் களையெடுக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு பின்பற்றும் முறையைப் போன்று, தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன. ஆதார் விவரம், நில ஆவணங்களுக்கு எலக்ட்ரானிக் ஆதாரங்கள், ரேஷன் கார்டு முறை உள்ளிட்டவை கர்நாடக அரசின் முக்கிய திட்டங்களில் சில.

தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதைப் பேசுவதை விட்டுவிட்டு கர்நாடக அரசின் முதன்மை திட்டங்களை மத்திய அரசு விமர்சிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.