மக்கள் எனக்கு தனிப் பெரம்பான்மை கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் முதல்வர் குமாரசாமி
ஹைலைட்ஸ்
- விவசாயக் கடன் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என குமாரசாமி கூறியுள்ளார்
- இன்னும் ஒரு வாரத்தில் விவசாயக் கடன் ரத்து அறிவிப்பு வரும் என்றுள்ளார்
- தேசிய வங்கிக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்றுள்ளார் குமாரசாமி
Bengaluru: நான் காங்கிரஸின் தயவில் தான் இருக்கிறேனே தவிர கர்நாடகத்தின் 6.5 கோடி மக்களின் ஆதரவில் இல்லை என்று தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, `எனக்கு கர்நாடக மக்களின் முழு ஆதரவு இல்லை என்பதால் தான் காங்கிரஸின் தயவில் முதல்வராகியுள்ளேன் என்று கூறுகிறேன். நான் தேர்தலின் போது, விவசாயக் கடனை முற்றிலும் ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதை நிறைவேற்ற முடியவில்லை என்றால் என் பதவியை ராஜினாமா செய்வேன்' என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், `நாங்கள் தனிப் பெரும்பான்மையைத் தான் விரும்பினோம். ஆனால், கர்நாடக மக்கள் எங்களுக்கு அப்படியொரு விஷயத்தைக் கொடுக்கவில்லை. எனவே, என்னுடையது சுதந்திரமான அரசு இல்லை. அதனால், இன்று காங்கிரஸின் தயவில் தான் நான் இருக்கிறேன். 6.5 கோடி கர்நாடக மக்களின் அழுத்தத்தில் நான் இல்லை. ஒரு அரசியல்வாதியாக எனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன. ஆனால், விவசாயிகளின் விஷயத்தில் எனக்கு தெளிவு இருக்கிறது' என்றார்.
கர்நாடகத்தில் பாஜக மற்றும் சில விவசாய சங்க தலைவர்கள், உடனடியாக விவசாயக் கடனை ரத்து செய்யுமாறு முதல்வர் குமாரசாமியை வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து குமாரசாமி, `விவசாயிகளுக்குத் தேவையான விஷயங்களைச் செய்வது உறுதி. ஆனால், விவசாயக் கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று கூறி என்னை பதவி விலகச் சொல்கிறீர்கள். அதை செய்ய மறுத்தால், நானே பதவி விலகவிடுவேன். அதற்கு ஒரு வாரம் உங்களால் காத்திருக்க முடியாதா؟ இன்னும் அமைச்சரவை கூட பதவியேற்கவில்லை. கூட்டுறவு சங்கங்கள் அளித்த கடன் மட்டுமின்றி தேசிய வங்கிகள் அளித்த கடனையும் சேர்த்து தள்ளுபடி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்காதீர்கள்' என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 25-ம் தேதி பாஜக-வின் எடியூரப்பா, மஜத தன் தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் போல விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் என்று எச்சரித்தார். இதையொட்டித்தான் குமாரசாமி, `ஒரு வாரம் பொறுத்திருங்கள்' என்று கூறியுள்ளார்.