New Delhi: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74வது பிறந்தநாள், இன்று நினைகூறப்படுகிறது. அவருக்கு இந்திய அளவிலான முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிறந்தார் ராஜீவ் காந்தி. அவர் 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7 வது பிரதமராக பதவி வகித்தார். 1984 ஆம் ஆண்டு, அவரது தாயான பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், ராஜீவ் காந்தி பிரதமரானார்.
அவர் 40வது வயதிலேயே பிரதமரானவர். மிகவும் இளைய வயதில் பிரதமர் பதவியை ஏற்றவர் என்ற பெருமைக்கு உரியவர் ராஜீவ். ஸ்ரீபெரும்பத்தூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில், தற்கொலைப் படையால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
தனது தந்தையின் பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மிகவும் பாசமுள்ள, அன்பு கொண்ட மனிதர் என் தந்தை. அவரின் இறப்பு எனது வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றது. அவருடன் நான் செலவு செய்த நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் உயிருடன் இருக்கும்போது, கொண்டாடிய பிறந்த நாள்களை எண்ணிப் பார்க்கிறேன். அவர் இல்லாமல் மிகவும் வாடுகிறேன். ஆனால், அவர் நினைவுகள் என்றும் வாடாது’ என்று உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டுக்காக அவர் எடுத்த முன்னெடுப்புகளை நினைவுகூறுவோம்’ என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.