This Article is From Jun 26, 2019

சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்கள் பட்டியல்: 9-வது இடத்தில் தமிழ்நாடு! கேரளாவுக்கு முதலிடம்!!

கடந்த முறை 3-வது இடத்தில் இருந்த தமிழகம் 6 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறது.

சுகாதாரத்தில் உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா மாநிலங்கள் மோசமான அளவில் இருக்கின்றன.

New Delhi:

சுகாதாரத்தை அளவுகோலாக கொண்டு சிறந்த மாநிலங்கள் பட்டியலை மத்திய அரசின் திட்ட அமைப்பான நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த முறை 3-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 6 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் உள்ளது. கடந்த முறை முதலிடத்தில் இருந்த கேரளா தற்போதும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

சுகாதார மாநிலங்கள் பட்டியலில்  தமிழகம் பின்தங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை பஞ்சாப் மாநிலம் 2-வது இடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தை ஆந்திரா பிடித்திருக்கிறது. 3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. 

கடந்த முறை ஆந்திராவும், மகாராஷ்டிராவும் பின் தங்கியிருந்தன. மொத்தம் இந்த பட்டியலில் 21 மாநிலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாஜக ஆளும் உத்தர பிரதேசம் 21-வது இடத்தில் இருக்கிறது. பீகார் 20-லும், ஒடிசா 19-வது இடத்திலும் உள்ளன. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், 'சுகாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களை மற்ற மாநிலங்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்தில் அனைத்து பிரிவுகளையும் மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

.