பெரும் பரபரப்புக்கு மத்தியில் சுவர் ஏறி குதித்து கடந்த வாரம் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் பெரும் பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனிடையே, ப.சிதம்பரம் தன்னை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், இன்றைய விசாரணை பட்டியலில் அந்த வழக்கு இடம்பெறவில்லை. இப்படி ஆரம்பமே சிதம்பரம் தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
தொடர்ந்து, சிதம்பரம் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதில், ஒன்று அமலாக்கத்துறை கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை பாதுகாக்கவும், மற்றொன்று சிபிஐ கைது செய்வதிலிருந்து பாதுகாக்கவும் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், கைதுக்கு முன் தொடரப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ கைது செய்து விட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, நடந்த விசாரணையில் என் தரப்பு வாதங்களை சொல்ல உரிமையுண்டு என உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை கசியவிட்டதாக ப.சிதம்பரம் தரப்பு பகிரங்கமாக குற்றம்சாட்டியது. எனினும், ப.சிதம்பரத்தின் வழக்கு ஆவணங்களை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் கசியவிடவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் வழக்கறிஞர்களுக்கு ஆவணங்களை கொடுத்த பிறகுதான் பத்திரிகைகளுக்கு வழங்கியதாக கூறி சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா வாதாடினார்.