Viral Pic: போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்ததில் 104 பிளாஸ்டிக் துண்டுகள், பாட்டில் மூடிகள் முதல் பலூன்கள் வரை இருப்பது தெரியவந்தது.
புளோரிடா கடற்கரையில் சிறு குஞ்சு ஆமை அங்குள்ள கம்போ லிம்போ நேச்சர் சென்ட்ரால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்தும் போனது. லாகர்ஹெட் கடல் ஆமையின் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆமை நீந்தும்போது சாப்பிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
குஞ்சு ஆமை நம் உள்ளங்கை அளவே இருக்கும் என்பதை படத்தை பார்த்தால் தெரியும். அதன் வயிற்றில் 104 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் ஆத்திரமுடனும் அக்கறையுடனும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சி.என்.என் செய்தி படி, குஞ்சு ஆமை இறப்பதற்கு முன் கடல் ஆமை மறுவாழ்வு உதவியாளரான எமிலி மிரோவ்ஸ்கி பரிசோதித்தார்.
“குஞ்சு ஆமை பலவீனமாகவும் சோர்வுடனும் இருந்தது. அது சரியாக இல்லை என்று என்னால் சொல்ல முடியும். போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்ததில் 104 பிளாஸ்டிக் துண்டுகள், பாட்டில் மூடிகள் முதல் பலூன்கள் வரை இருப்பது தெரியவந்தது. பிளாஸ்டிக்கை சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வை ஆமைகளுக்கு ஏற்படுகிறது. இதன் விளைவாக அவை சரியாக சாப்பிடாமல் தேவையான ஊட்டச்சத்தினை பெறுவதில்லை”
“இது உண்மையிலேயே மனம் உடைய வைக்கிறது” “ஆனால் இது பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்த ஒன்று. மக்கள் தற்போதுதான் இந்த படங்களைப் பார்க்கிறார்கள். அது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது”
பிளாஸ்டிக் மாசுபாட்டினால் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான கடல் ஆமைகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பின் இறக்கின்றன. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவதற்கான தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2050 ஆம் ஆண்டளவில் உலகப் பெருங்கடல்களில் மீன்களை விட அதிகமான பிளாஸ்டிக் இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Click for more
trending news