This Article is From May 21, 2020

வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் 11 மணி முதல் 3.30 வரை காரணமின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் கேரளத்தையொட்டிய பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான அதி தீவிர புயலான ஆம்பன் புயல், சூப்பர் புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கிச் சென்றது. தொடர்ந்து, நேற்று மாலை ஆம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது.

ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை கடந்து விட்ட நிலையில் வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. காற்றின் ஈரப்பதத்தை புயல் இழுத்துச் செல்வதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கமான வெப்ப நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக வட தமிழக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும்.வட தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் 11 மணி முதல் 3.30 வரை காரணமின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.