"தமிழகத்தின் வட உட்புற மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது"
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பொழிந்து வரும் நிலையில், பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்றும் வரும் நாட்களிலும் மாநிலத்தில் எந்த மாதிரியான வானிலை நிலவும் என்பது குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன், ‘ஹீட்-வேவ் என்று சொல்லப்படும் அனல் காற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று அதிக அளவில் இருக்கும்.
தமிழகத்தின் வட உட்புற மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் அடுத்து வரவுள்ள நாட்களிலும் வெப்பநிலை மிக அதிகமாகவே இருக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதன் மூலம் மழை வரும் வாய்ப்பு குறைவே.
திருத்தனியில் இன்று 44 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெயில் இருக்க வாய்ப்புள்ளது. சென்னையில் 41 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும்.
விழுப்புரம், கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பொழிந்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூரில் 87 மில்லி மீட்டர் மழையும், மனம்பூண்டியில் 72 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் மதுரையில் நேற்று 63 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கரூர் மாவட்ட மாயனூரில் 62 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது' என்று கூறியுள்ளார்.