Heavy Rain Alert for Tamilnadu - 'அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'
Tamilnadu Rains - தமிழகத்தில் இந்த ஆண்டு நன்றாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையானது, தற்போது தீவிரமடைந்துள்ளது. அடுத்து 24 மணி நேரத்திற்கு மாநிலத்தின் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல இயக்குநர், பாலச்சந்திரன், “தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையானது வலுப்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கனமழையும் 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தென் மேற்கு அரபிக் கடலில் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் நாட்களில் தென் தமிழகத்தில் நல்ல மழை பொழிவு இருக்கும். வடதமிழகத்தில் லேசான மழை மட்டுமே பெய்யும். குறிப்பாக டிசம்பர் 3, 4 தேதிகளில் அதிக மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.
அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையானது, இதுவரை 40 சென்டி மீட்டர் பெய்துள்ளது. இயல்பான அளவு 36 சென்டி மீட்டர்தான். இது இயல்பைவிட 11 சதவிகிதம் அதிகமாகும்,” என்று தகவல் தெரிவித்துள்ளார்.