Heavy Rain Alert - "அடுத்த 2 வாரங்களுக்கு இரவு மற்றும் மற்றும் காலையில் கடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும்"
Heavy Rain Alert - தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக நல்ல மழை (Rain) பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஏனைய உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்,” தெரிவித்தது.
அதேபோல, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடியில் அதிகபட்சமாக, 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் கனமழை குறித்து வானிலை மையம், வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான், “சென்னையில் இன்று வானம், மிகத் தெளிவாக இருந்தது. அதேபோல நல்ல வெளிச்சமாகவும் தென்பட்டது. எனவே தமிழ்நாடு கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு நல்ல நாட்கள் காத்திருக்கின்றன. கிழக்கிலிருந்து வீசும் காற்றானது, தமிழகத்தில் நல்ல மழைப் பொழிவைத் தரும். 14 ஆம் தேதி காலையிலிருந்து அது ஆரம்பிக்கலாம். அடுத்த 2 வாரங்களுக்கு இரவு மற்றும் மற்றும் காலையில் கடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும்,” என்று கூறியுள்ளார்.