இன்றும் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை உட்பட வடதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை காலை வரை தொடர்ந்தது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரை திருவள்ளூரில் அதிகபட்சமாக 22 சென்டி மீட்டர் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து பூண்டியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அரக்கோணத்தில் 17 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. தாமரைப்பாக்கம், சோழவரம் மற்றும் திருத்தணியில் முறையே 15, 13 மற்றும் 12 சென்டி மீட்டர் மழை கொட்டியது.
சென்னையில் சராசரியாக 10 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இன்றும் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.