தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. இது தென்மேற்கு வங்கக் கடலை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், அடுத்த ஓரிரு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளிகளில் வைத்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்கும் பணி நடந்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.