இமாச்சல பிரதேசத்தின் லாஹுல் மற்றும் ஸ்பிடியில் பனி பொழிந்து வருகிறது
New Delhi: டெல்லி, மும்பை, கேரளா, இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கடுமையான பனி பொழிவும், கனமழையும் பெய்து வருகிறது. இதையடுத்து அம்மாவட்டத்தின் குல்லு, கங்கரா மற்றும் ஹமிர்பூர் மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, அம்மாநிலத்தில் 8 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 45 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதில் 35 பேர் ரூர்க்கியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அம்மாநிலத்தின் லாஹுல் மற்றும் ஸ்பிடி மாநிலங்களில் 45 பேர் கொண்ட குழு மலையேற்றம் மேற்கொண்டிருந்தது என ஏஎன்ஐ செய்தி ஊடகம் கூறியுள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இடுக்கி, வயநாடு, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
மும்பையிலும் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரான டெல்லியிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. திங்கள் கிழமை அங்கு நாள் முழுவதும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.