மேட்டூ அணையின் நீர்மட்டம் நாளை காலைக்குள் 100 அடியை எட்டக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதையடுத்து நாளைமுதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தற்போது தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேலாக உள்ளதால் மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நீர்மட்டம் 85 அடியை தாண்டியதை தொடர்ந்து பண்ணவாடி பரிசல் துறையில் வெளியே தெரிந்து வந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம் மற்றும், நந்தி சிலை ஆகியவை நீரில் மூழ்கின.
நாளைக்குள் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிலிருந்து மட்டும் அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடியை எட்டினால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் காவிரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.