This Article is From Oct 22, 2019

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதன் அளவு 21 செமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் இடங்கள் என்று  கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே அரபிக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான ஆந்திராவில் கடல் சீற்றமிருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

கேரளா, கடலோர கர்நாடகா, புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் ஆகிய இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, தமிழகத்திலும் எந்தெந்த இடங்களில் மிக பலத்த மழை, மிக கனமழை, கனமழை பெய்யும் இடங்கள் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆகியவை, கணித்துள்ளன. அந்த  இடங்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். இதன் அளவு 21 செமீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் இடங்கள் என்று  கணித்துள்ளனர். 

மிக கனமழை பெய்யும் இடங்களாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ஆகிய இடங்களில் மிக கனமழையை குறிக்கும் ஆரஞ்சு நிறம் குறிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதற்காக மேற்கண்ட இடங்கள் மஞ்சள் நிறம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. 


 

.