This Article is From Oct 30, 2019

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது.

வடகிழக்கை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்பதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த மண்டலமாகவும் அதாவது புயல் சின்னமாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. 

தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்திலும், பெரம்பலூர், அரியலூர் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என்பதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

.