கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மலையோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு 12 முதல் 20 செண்டி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும்.
வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ., கமுதி, பள்ளிப்பட்டு, பெரியகுளம், 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 நாளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் ஒரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெப்பசலனம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பிரச்னை நிலவி வரும் சூழலில், மழை செய்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது.