4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் கூறியதாவது, வரும் 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1, 2ம் தேதிகளில் தமிழகத்தில் வச்சி செய்யப் போகும் மழை காத்திருக்கிறது.
நமக்கு வில்லனான வறண்ட காற்று தமிழகக் கடற்கரை மாவட்டங்களில் மிக விரைவில் தாக்க உள்ளது. ஆனால் அதற்குள் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில், ஒருநாளாவது இரவு தொடங்கி காலை வரை கனமழை பெய்யும் வாய்ப்பு நிச்சயம் கிடைத்துவிடும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் 12 செமீ, லால்பேட்டையில் 9 செமீ மழை பெய்துள்ளது.
திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார இடைங்களில் பலத்த மழை பெய்தது. நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கடலூர் மற்றும் அதனை சற்றியுள்ள இடங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பணார்கோவில் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. நாகை, வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, நாகை, சிதம்பரம், திருவிடைமருதூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.