தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழையோ மிக பலத்த மழையோ பெய்யக்கூடும் என்று இந்திய வானியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலின் சில பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்காள விரிகுடாவின் மத்திய, வடக்குப் பகுதிகளிலும் அந்தமான் பகுதியிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
காவிரி ஓரத்திலுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மத்திய நீர் ஆணையம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகம், கேரளாவில் பலத்த மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபிணி அணைகளில் இருந்து 1.4 இலட்சம் கன அடி நீர் இருதினங்களில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரங்களில், தமிழகத்தில் வால்பாறையில் அதிகபட்சமாக 18 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லாரில் 17 செமீ மழை பதிவானது. நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
பெங்களுரில் உள்ள வானியல் ஆய்வுத்துறை மையம், கர்நாடகாவின் கடலோர, தெற்குப் பகுதிகளிலும் உடுப்பி, வடக்கு கர்நாடகாவிலும் புதன்கிழமை வரை மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், இடுக்கி மாவட்டங்களிலும் புதன்கிழமை வரை மழை பெய்யும் என கேரள வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.