This Article is From Jun 26, 2020

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அடுத்த இரண்டு நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஹைலைட்ஸ்

  • இந்த மாதத் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பமானது
  • தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது
  • மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வந்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் அளித்துள்ள தகவல்படி, ‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்குத் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் காரையூர் பகுதியில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

.