Tamilnadu Weatherman Update - "சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரங்களில்தான் மழை வெளுத்து வாங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்"
Tamilnadu Weatherman Update - தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பிரபல வானிலை கணிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் வெதர்மேன், “கோயம்பத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். அதேபோல ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இரவும் நாளை காலையும் நல்ல மழை பெய்ய இருக்கிறது.
டெல்டா மாவட்டங்கள், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் மீண்டும் இரவு மழை பெய்யும். காலை வரை மழை தொடரும். சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரங்களில்தான் மழை வெளுத்து வாங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானி சகார் நிரம்பி வழியவுள்ளது. நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் பவானி சாகர் அணை நிரம்ப உள்ளது. வைகை அணைக்கும் நீர் வரத்து நல்ல அளவில் இருக்கிறது. சென்னையில் உள்ள நீர் நிலைகளிலும் சென்ற ஆண்டை ஒப்பிடும்போது, நீர் தேக்கம் அதிகமாக இருக்கிறது.
தமிழக்கத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை மூலம் 95 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னையில் 155 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.